Sunday 14 April 2013

அழகுத் தாமரை

ராகம் -திலங்
 தாளம் -ஆதி
எடுப்பு
        அழகுத் தாமரை ஆடுகிறாள்- வண்டு
        ஆனந்தமாய் இசை பாடுது பார்!   (அழகு

தொடுப்பு
         அழைக்கும் கரம் குவிந்ததென-மொட்டு
         அசைந்து அசைந்து நிற்பதைப் பார்!   ( அழகு
அமைதி
        தூயதென்றல் சுருதி சேர்க்க-அலை
       தோம் தோமென்று தாளம்போட
       பாயும் தேனை விருந்தளித்தே
       பறவை இனங்கள் பார்த்திடவே  (அழகு

Wednesday 10 April 2013

ஆடி ஆடி அசைந்தாள்


ராகம் பைரவி                           
தாளம் ஆதி


எடுப்பு

     ஆடி ஆடி அசைந்தாள்-அவள்
     ஆடை பளபளக்க மேடை மினுமினுக்க-ஆடி

தொடுப்பு

     பாடிடும் பூங்குயில் பக்கத்திலே இசைக்க
     பஞ்சவர்ணக் கிளிகள் பார்த்துப் பார்த்து ரசிக்க
                                                                                                   -ஆடி

அமைதி

     குவிந்த வாய் திறந்து சிவந்த இதழ் விரித்து
     குத்துவிளக்கு மொட்டு பக்குவமாய் மறைத்து
     கவிவாணர் கலைவாணர் கருத்தையெல்லாம் இழுத்து
     கதிரவன் முகம் பார்த்து புதுவண்ண நிறம் காட்டி- ஆடி

     மணி இழைத்த பதக்கம் மார்பினிலே துலங்க
     மதுவண்டின் ரீங்காரம் விதவிதமாய் முழங்க
     தணியாத காதலினால் முகம் மலர்ந்து விளங்க
     தாமரைப் பெண்ணழகி ஒரு காலால் இடை குலுங்க- ஆடி