Sunday 14 April 2013

அழகுத் தாமரை

ராகம் -திலங்
 தாளம் -ஆதி
எடுப்பு
        அழகுத் தாமரை ஆடுகிறாள்- வண்டு
        ஆனந்தமாய் இசை பாடுது பார்!   (அழகு

தொடுப்பு
         அழைக்கும் கரம் குவிந்ததென-மொட்டு
         அசைந்து அசைந்து நிற்பதைப் பார்!   ( அழகு
அமைதி
        தூயதென்றல் சுருதி சேர்க்க-அலை
       தோம் தோமென்று தாளம்போட
       பாயும் தேனை விருந்தளித்தே
       பறவை இனங்கள் பார்த்திடவே  (அழகு

Wednesday 10 April 2013

ஆடி ஆடி அசைந்தாள்


ராகம் பைரவி                           
தாளம் ஆதி


எடுப்பு

     ஆடி ஆடி அசைந்தாள்-அவள்
     ஆடை பளபளக்க மேடை மினுமினுக்க-ஆடி

தொடுப்பு

     பாடிடும் பூங்குயில் பக்கத்திலே இசைக்க
     பஞ்சவர்ணக் கிளிகள் பார்த்துப் பார்த்து ரசிக்க
                                                                                                   -ஆடி

அமைதி

     குவிந்த வாய் திறந்து சிவந்த இதழ் விரித்து
     குத்துவிளக்கு மொட்டு பக்குவமாய் மறைத்து
     கவிவாணர் கலைவாணர் கருத்தையெல்லாம் இழுத்து
     கதிரவன் முகம் பார்த்து புதுவண்ண நிறம் காட்டி- ஆடி

     மணி இழைத்த பதக்கம் மார்பினிலே துலங்க
     மதுவண்டின் ரீங்காரம் விதவிதமாய் முழங்க
     தணியாத காதலினால் முகம் மலர்ந்து விளங்க
     தாமரைப் பெண்ணழகி ஒரு காலால் இடை குலுங்க- ஆடி


Wednesday 12 December 2012

எம் கே டி பாகவதர் பாடியது

ஆடும் அருவி
ராகம் -சாருகேசி
தாளம் - ஆதி




எடுப்பு

ஆடிவரும் அருவியிலே அமுத இசை கேட்குதம்மா!
அள்ளிப் பருகிடவே உள்ளம் துடிக்குதம்மா!

தொடுப்பு

பாடும் குயிலினமும் பச்சைப் பசுங்கிளியும்
பாய்ந்தோடும் மானினமும் நீர்வேட்கை கொள்ளுதம்மா-ஆடி

முடிப்பு

கொடிமுல்லை மாந்தளிரும்
குலுங்கும் சுவைக் கனியும்
குளித்துக் குளித்து அதில்
கொள்ளையின்பம் காணுதம்மா

பொடியாம் மகரந்தம்
பூவண்டு தூவிடவும்
பொன்னிறக் கதிரோனும்
புனலாடி நீந்துகிறான்
   (திருச்சி தியாகராஜன்)

Monday 10 December 2012

கவிஞரின் நிழற்படங்கள்

திருச்சி தியாகராஜன்
(Trichy Thiyagarajan)



திருச்சி தியாகராஜன்
(Trichy Thiyagarajan) 



திருச்சி தியாகராஜன்
(Trichy Thiyagarajan) 


Saturday 1 December 2012

போடா போடா பைத்தியமே

 படம் - உல்லாசப் பயணம்
பாடியவர்- டி எம் சௌந்தரராஜன்

click to hear

கவிஞரின் முதல் திரைப்பாடல்

படம் -பொன் விளையும் பூமி
பாடியவர் -சி எஸ் ஜெயராமன்

கவிஞர் திருச்சி தியாகராஜன் திரைத்துறையில் எழுதிய இந்த முதல் பாடலிலேயே, பொன் விளையும் பூமி படத்திற்கான விமர்சனத்தை எழுதிய தினத்தந்தி ,பாடலை எழுதியது பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரமா? திருச்சி தியாகராஜனா? என்ற கேள்வியை எழுப்பியுள்ளது.அந்தளவுக்கு புகழ் பெற்ற பட்டுக்கோட்டையாரின் பாடல்களோடு ஒப்பிட்டு எழுதியது குறிப்பிடத்தகுந்தது


பொன் விளையும் பூமியிலே
பொழுதெல்லாம் பாடுபட்டும்
புதுவாழ்வு காணாமல்
பொங்குகிறான் தொழிலாளி
அன்னைபூமி செல்வமெல்லாம்
அள்ளி அள்ளி தந்தாலும்
அரைவயிற்றுக் கஞ்சியில்லை
ஆடையில்லை வீடுமில்லை
தொகையறா
குடும்ப வண்டி குடுகுடுன்னு
உருண்டு ஓடுது- பாதை
குறுக்கே வந்து மேடு பள்ளம் 
தடுக்கப் பார்க்குது

கொடுமையான வேங்கைப்புலிகள்
காட்டை அழிக்குது- விலங்கு
குணம் படைத்த மனித மிருகம் 
நாட்டை அழிக்குது

சேற்றைக் கலக்கி நாத்தை நட்டவன்
காத்தா பறக்கிறான் - அதைப்
பாத்து ரசிக்கும் மோசக்காரன்
நோட்டா மடிக்கிறான் - பச்சை
நோட்டா மடிக்கிறான்

ஆடி ஆடி நம்ம ஜோடிமாடுகள்
ஜோரா போகுது-அதில்
ஆணும் பெண்ணும் குடும்பம் நடத்தும்
அழகு தோணுது

மூடிவச்சு மோசடி செய்யும்
பேடியைப் போலே- ஒருத்தன்
முன்னே விட்டு பின்னாலே வந்து
கடையாணியைக் கழட்டுறான்

முன்னே வச்ச கால நீயும்
பின்னே வைக்காதே - உன்
முன்னேற்றத்தில் தடையைப் பார்த்து
முகம் சுளிக்காதே

கண்ணு ரெண்டின் பார்வைபோலே
ஒண்ணா ஓடுங்க- வழியில்
காணும் ஏற்ற தாழ்வைக்
காலால் மிதிச்சிப் போடுங்க.


மகளுக்குப் பாடிய தாலாட்டு

1952 ஆம் ஆண்டு கவிஞர் திருச்சி தியாகராஜனுக்கு டிசம்பர் மாதம் க்றிஸ்துமஸ் நாளன்று  பெண்குழந்தை பிறக்கிறது.வான்மதி என்று பெயர் சூட்டுகிறார்.மகள் வான்மதிக்காக கீழ்கண்ட தாலாட்டுப்பாடலையும் எழுதுகிறார்.பின்னர் அவரது நூலிலும் இப்பாடல் இடம் பெற்றது.

தாலாட்டுப் பாடல்
எடுப்பு
வஞ்சகமில்லா மானிடப் பிஞ்சே
வான்மதியே இன்பத் தேன்துளியே

தொடுப்பு
மஞ்சம் உனக்கு என் நெஞ்சமடீ
மான்விழி மூடியே நீ உறங்காய்
அமைதி
ஆசையென்னும் கடலில் அள்ளிய வெண்முத்தே
அரும்பு மல்லிகையே! செங்கரும்பின் தீஞ்சுவையே!

பாசமென்னும் வலையால் என்னைப் பற்றி இழுத்துவிட்டாய்
பாவலர் கற்பனையின் ஓவியமே உறங்காய் நீ!